கோபிசெட்டிபாளையம் அருகே தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே மனைவி, மகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம் கோபி-அந்தியூர் சாலையில் உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). போர்வேல் ரிக் வண்டி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி இந்திராணி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகளும், மிதுன் சக்கரவர்த்தி என்ற மகனும் உள்ளனர்.
செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மனைவி கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.இதனால் விரக்தியில் இருந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.