ஈரோடு: நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சிகளில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் ஆகிய பேரூராட்சிகளில் பிரதான குழாய்கள் இடமாற்றம் காரணமாக குடிநீர் விநியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.;
நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் ஆகிய பேரூராட்சிகளில் பிரதான குழாய்கள் இடமாற்றம் காரணமாக குடிநீர் விநியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக நிர்வாகப் பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு கோட்டம், ஈரோடு அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெடுஞ்சாலை துறை சாலை மேம்பாட்டுத் திட்டம் II, திருப்பூர் கோட்டம் சார்பில் சித்தோடு -கவுந்தப்பாடி-கோபி நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்டம் ஈரோடு அலுவலகத்தின் மூலம் பராமரிக்கப் பட்டு வரும் நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் ஆகிய நான்கு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் சித்தோடு கவுந்தபாடி-கோபி சாலையில் தயிர்பாளையம் அருகில் 330 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே நெடுஞ்சாலை துறையின் மூலம் அமைக்கப்பட்ட 400mm DI பிரதான குழாய்களை தோண்டி எடுத்து சாலையின் அருகில் இடமாற்றம் செய்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், பேரூராட்சிகளுக்கான குடிநீர் விநியோகம் சுமார் நான்கு நாட்கள் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி வருகின்ற ஜன.9ம் தேதி முதல் 12ம் தேதி முடிய நான்கு நாட்களில் மேற்சொன்ன குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ள நெடுஞ்சாலை துறையின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பேரூராட்சி நிர்வாகத்தினர், உள்ளூர் நீர் ஆதாரத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி முடிந்தபின் பவானி ஆற்று நீர் பொதுமக்களுக்கு வழங்க தக்க நடவடிக்கை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.