73 ஆண்டுகளுக்கு பிறகு கோபிசெட்டிபாளையம் நகராட்சியை கைப்பற்றியது திமுக

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி தலைவர் பதவியை திமுக 73 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி உள்ளது.

Update: 2022-03-04 15:45 GMT

கோபி நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.நாகராஜ் 

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் 16 வார்டுகளிலும், அதிமுகவினர் 13 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றார்.அதைத்தொடர்ந்து இன்று நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கில் நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த நகர செயலாளரும், 10 வது வார்டு கவுன்சிலருமான என்.ஆர்.நாகராஜ் அறிவிக்கப்பட்டு இருந்தார். காலை 10 மணிக்கு நகராட்சி கூட்ட அரங்கிற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் என 17 பேர் வந்தனர். அதைத்தொடர்ந்து மறைமுக தேர்தல் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம் ஆனந்த் விளக்கினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த என்.ஆர்.நாகராஜ் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம் ஆனந்த் அறிவித்தார்.

கோபி நகராட்சி உருவானதில் இருந்து 73 ஆண்டுகளில் முதல்முறையாக திமுகவை சேர்ந்தவர் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுகவினர் நகராட்சி அலுவலகம் முன்பு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்அதைத்தொடர்ந்து நகராட்சி தலைவராக வெற்றி பெற்ற திரு.என்.ஆர்.நாகராஜ் நகராட்சி அலுவலகத்தின் வெளியே வந்ததும் உற்சாகத்துடன் திமுகவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக முன்னாள் சிட்கோ சேர்மனும் மாநில திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான சிந்துரவி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன், காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் பி.என்.நல்லசாமி உட்பட ஏராளமான திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News