அந்தியூர் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
அந்தியூர் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு மொத்தம் உள்ள 18 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்துவரும் நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளனர்.
அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, ஒலகடம் மற்றும் நெரிஞ்சிப்பேட்டை ஆகிய ஐந்து பேரூராட்சிகளில் நடைபெறும் தேர்தல் முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், இன்று மதியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள், கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பற்றி கேட்டறிந்தார்.
மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். அப்போது பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் அந்தியூர் எஸ்ஐ கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.