ஈரோட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம்

ஈரோட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

Update: 2023-08-18 10:24 GMT

ஈரோட்டில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி, சத்தி சாலை ரத்னா ரெசிடென்சியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குநரும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநருமான சிஜீ தாமஸ் வைத்தியன் தலைமை வகித்தார்.

இக்கருத்தரங்கானது, ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்காக நடைபெற்றது. இதில் கைடன்ஸ் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பு கூட்டுதல் சந்தை இணைப்புகளை உருவாக்குதல் தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.

மேலும், வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, வேளாண் உட்கட்டமைப்பு நிதியினை பயன்படுத்துதல் தொடர்பாகவும் மற்றும் அறுவடைக்கு பின்பு உணவு பதப்படுத்துதல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தலைவர், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் அழகுசுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிகண்டன், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன் (பொ), துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சார்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News