ஈரோடு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19,77,419 பேர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜன.6) வெளியிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜன.6) வெளியிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இறுதி வாக்காளர் பட்டியல்-2025யை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (ஜன.6) வெளியிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ஐ முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல்-2025 இன்று (ஜன.6ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவைத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2024 அக்டோபர் மாதம் 29ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் பின்னர், ஈரோடு மாவட்டத்தின் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் கடந்த நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 25, 26 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேற்படி சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் எண் பதிவு, திருத்தம் போன்ற வாக்காளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு உரிய படிவங்கள் பெறப்பட்டது.
மற்ற நாட்களிலும் நேரிலும், இணைய வழியிலும் மேற்படி கோரிக்கைகளுக்காக படிவங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர். அதன்பேரில், மேற்படி படிவங்களின் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சிறப்பு சுருக்கத்திருத்த காலக்கட்டத்தில் 35,855 பெயர் சேர்த்தல் படிவங்களும், 23,112 பெயர் நீக்கல் படிவங்களுக்கும், 11,851 திருத்தங்கள் தொடர்பான படிவங்களுக்கும் ஆக மொத்தம் 70,818 படிவங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 12,746 வாக்காளர்கள் புதியதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலுடன் ஆதார் அடையாள அட்டை 64.24 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு முதல் நிலை சரிபார்ப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், 480 வாக்குப்பதிவு அலகுகள், 480 கட்டுப்பாட்டு அலகுகள் 480 வாக்காளர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் (விவிபெட்) ஆகியவை 6 பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டபேரவைத் தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.6ம் தேதி) படி, மொத்தம் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 55 ஆயிரத்து 356 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 871 பேர், மூன்றாம் பாலித்தனவர்கள் 192 பேர் என மொத்தம் 19 லட்சத்து 77 ஆயிரத்து 419 பேர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம்:-
மேற்படி, இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்ட அலுவலர் ரவி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.