உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஈரோடு ஆட்சியா் ஆய்வு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, மக்களின் சேவைகள், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில், இன்று (மே.21) புதன்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சதுமுகை ஊராட்சி, ஆலத்துக்கோம்பை மெயின் வீதியில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.15.16 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும், அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் வீதம் ரூ.12.40 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நடுப்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.21 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் தளம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு, மருந்தகத்தின் செயல்பாடுகள் மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார். மேலும், சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் தாமரை, சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் ஜமுனாதேவி மற்றும் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாமணி, மாதவன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.