ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: வருகிற 24ம் தேதி கடைசி நாள்!
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 91 அங்கன்வாடி பணியாளர், 12 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 36 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
வட்டாரம் வாரியாக அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும்.
விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 24ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதன்மை அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு 25 முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரை இருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதா ரர்கள் மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலி பணியிடம் உள்ள குழந்தைகள் மையம் இருக்கும் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.