ஈரோட்டில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.;

Update: 2025-05-07 11:00 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பில், புதிய பேருந்துகளின் இயக்கத்தினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (மே.7) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலத்திற்கு நகர்ப்புற பேருந்துகள் 9 பேருந்துகள், 56 புதிய புறநகர் பேருந்துகள் என மொத்தம் 65 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.


 2025-2026-ம் ஆண்டிற்கு கூடுதலாக ஈரோடு மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட 59 பேருந்துகளில் 8 புதிய நகரப்பேருந்துகளும், மலைப்பகுதியில் இயக்ககூடிய ஒரு புதிய சிறிய புறநகரப் பேருந்தும் இன்று (மே.7) வழித்தடத்தில் இயக்க தயாராக உள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 43 புறநகர் பேருந்துகள், 2 நகர பேருந்துகள் மற்றும் மலைப்பகுதியில் இயக்கக்கூடிய 1 சிறிய பேருந்து என 46 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இன்று‌ (மே.7) அந்தியூர் கொங்காடை (வழி தாமரைக்கரை, ஒசூர்) ஒரு புறநகர் பேருந்து, பவானி பெருந்துறை (வழி சித்தோடு, நசியனூர்), சூரம்பட்டிவலசு - பவானி (வழி ஈரோடு பே.நி, பி.பெ.அக்ரஹாரம்), ஈரோடு பேருந்து நிலையம் சென்னிமலை (வழி ஈரோடு இரயில் நிலையம், வெள்ளோடு), ஈரோடு பேருந்து நிலையம் - சிவகிரி (வழி மொடக்குறிச்சி, விளக்கேத்தி), ஈரோடு பேருந்து நிலையம் திருச்செங்கோடு (வழி சோலால், கொக்கராயன்பேட்டை), ஈரோடு பேருந்து நிலையம் - பெருந்துறை (வழி திண்டல், மேட்டுக்கடை), பவானி - ஈங்கூர் (வழி சித்தோடு, நசியனூர், பெருந்துறை), ஈரோடு பேருந்து நிலையம் துடுப்பதி (வழி திண்டல், மேட்டுக்கடை, பெருந்துறை ஆகிய 8 நகரப்பேருந்துகள் என 9 புதிய பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பேருந்தின் விலை ரூ.44 லட்சம் என மொத்தம் ரூ.3.96 கோடி ஆகும்.


தமிழ்நாடு அரசால் விடியல் பயணத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, ஈரோடு மண்டலத்தில் 304 நகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாளொன்றிக்கு சுமார் 3.56 லட்சம் மகளிர் தினசரி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தாளவாடி மலைப்பகுதியில் 35 கி.மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் 1 புறநகர் பேருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு, நாளொன்றிக்கு சுமார் 682 மகளிர் வீதம் நாளது வரை 1.51 லட்சம் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் (பொ) தனலட்சுமி, பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, ஈரோடு மண்டலம்) சிவக்குமார், துணை மேலாளர் (வணிகம்) ஜெகதீஸ், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News