நம்பியூர் வட்டத்திற்கான நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்!
ஈரோட்டில் நம்பியூர் வட்டத்திற்கான நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் சேவையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 23) கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
ஈரோட்டில் நம்பியூர் வட்டத்திற்கான நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் சேவையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 23) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 2 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 6 கால்நடை மருத்துவமனைகள், 106 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 24 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 10,52,285 கால்நடைகள் மற்றும் 61,87,054 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு உள்ள மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டம் கால்நடை பன்முக மருத்துவமனைகள், மொடக்குறிச்சி, பவானி, தாளவாடி, அந்தியூர், பெருந்துறை வட்டம் சென்னிமலை, கொடுமுடி வட்டம் கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவமனைகள் என 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் செயல்பட்டு வருகிறது.
இவ்வாகனங்கள் மூலம் 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 23) நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட அழகம்பாளையம், ஆண்டிபாளையம், சந்தையபாளையம், வவுத்துக்கவுண்டன்புதூர், ஆலாம்பாளையம், எல்.மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்வாகனத்தில் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர் மற்றும் ஒரு ஊர்தி ஓட்டுநர் பணியாற்றுவார்கள். இவ்வாகனத்தின் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இந்த மருத்துவ வாகனம் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் மரு.எஸ்.பாஸ்கர், துணை இயக்குநர் பிரிசில்லா மாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு.எத்திராஜன், மரு.கண்ணன், மரு.அய்யாசாமி, மரு.வெங்கடாசலம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.