சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மனுநீதி நாள் முகாம்: 109 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் டான்போஸ்கோ மாணவர் விடுதி வளாகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.;

Update: 2025-03-12 12:10 GMT

மனுநீதி நாள் முகாமில் பயனாளிக்கு சொட்டு நீர்ப்பாசன உபகரணத்தினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் டான்போஸ்கோ மாணவர் விடுதி வளாகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூர் உள்வட்டம், குத்தியாலத்தூர் கிராமம், கடம்பூர் டான் போஸ்கோ மாணவர் விடுதி வளாகத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (மார்ச் 12ம் தேதி) நடைபெற்றது. இந்த முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, 109 பயனாளிகளுக்கு ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் சாவித்திரி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அருணா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட சுகாதார அலுவலர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ கோபால், சத்தியமங்கலம் வட்டாட்சியர் ஜமுனாராணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News