ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஜன.10, 13, 17 தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஜனவரி 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஜனவரி 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று (ஜன.7) அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் நடத்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. அரசு விடுமுறை தினங்களை தவிர மற்ற நாட்களில் வருகின்ற 17ம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். அதன்படி பொங்கல் பண்டிகை விடுமுறை இருப்பதால் 10ம் தேதி, 13ம் தேதி, 17ம் தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு வராது. தேர்தலில் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள். 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒரு தணிக்கை குழு என மொத்தம் 5 வகையான குழுக்கள் செயல்படுகின்றன. இதில் நிலை கண்காணிப்பு குழு மட்டும் 10ம் தேதி முதல் செயல்படும். மற்ற குழுக்கள் தற் போது இருந்தே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது. கடந்த முறை மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மனிஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.