காலிங்கராயன் தினத்தையொட்டி ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு அருகே மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.;
காலிங்கராயர் தினத்தையொட்டி, ஈரோடு அருகே மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜன.18) மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில், காலிங்கராயன் தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், காலிங்கராயன் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கனகபுரத்தில் பிறந்த காலிங்கராயன், பவானி ஆற்றின் குறுக்கே காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஆவுடையார்பாறை வரை சுமார் ஏறத்தாழ 57 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டி கி.பி.1282ம் ஆண்டு தை-5ம் நாள் தான் உருவாக்கிய அணைக்கட்டையும், வாய்க்காலையும் உலகுக்கு அர்பணித்ததால் அந்த நாள் (தை 5) காலிங்கராயன் தினமாக கொண்டாடப்படுகிறது.
பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளை தான் வெட்டிய கால்வாயின் மூலம் இணைக்க காலிங்கராயன் முற்பட்டார். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பிற்கு வித்திட்டவர் காலிங்கராயன். இவர் நினைவாக ஈரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகை பொதுப்பணித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் 2018ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயருக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, காலிங்கராயனால் அமைக்கப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு ஆண்டு தோறும் தை 5ம் நாள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று (ஜன.18) தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் (நீர்வள ஆதாரத் துறை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், காலிங்கராயனின் வாரிசுதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.