கவுந்தப்பாடியில் சீட்டு விளையாட்டில் தகராறு: நண்பன் கடப்பாரையால் தாக்கி கொலை
கவுந்தப்பாடி அருகே சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் முல்லை சக்தி என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து அதில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பவானி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியை சேர்ந்த சுஷின் (40), மருங்கூர் தாலுகா ராஜாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷ் என்பவர் அங்கிருந்த கடப்பாரையால் சுஜின் என்பவரை தலைமுகம் மற்றும் உடல் முழுவதும் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து ரமேஷ் கொலை நடந்த இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் குறித்து கோபி காவல் துணை கண்காணிப்பாளர், கவுந்தப்பாடி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.