பவானியில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
பவானியில் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முதல் பருவ தமிழ் தேர்வில் முன்கூட்டியே மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்து தேர்வு எழுதிய விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானி காமராஜர்நகர் நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு எனப்படும் முதல் பருவ தேர்வுத் தமிழ் தேர்வு நேற்று காலை 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியராகவும், தமிழ் பாடப்பிரிவு ஆசிரியராகவும் பணியாற்றி வரும் காமராஜர்நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட தமிழ் தேர்வு வினாத்தாளை தேர்வு நடப்பதற்கு முன்பாக வழங்கி விடைகளை பார்த்து தேர்வு எழுத சொன்னதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பள்ளிக்கு வந்த பெற்றோர் இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து தலைமையாசிரியரிடம் கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதையடுத்து தகவலறிந்த பவானி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை குழு அமைத்து விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் முதல் பருவ தேர்வு முறையாக நடக்க வட்டார கல்வி அலுவலர் கண்காணிப்பு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.