அந்தியூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு
தமிழகத்தின் சிறந்த காவல் நிலைய விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட அந்தியூர் காவல் நிலையத்தை டி. ஐ. ஜி. முத்துசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.;
அந்தியூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கோவை மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி. உடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக, சிறந்த காவல் நிலையம் கண்டறியப்பட்டு தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. அவ்வகையில், ஈரோடு மாவட்டம் பவானி சப் டிவிஷனுக்கு உட்பட்ட அந்தியூர் காவல் நிலையம், தமிழகத்தின் சிறந்த காவல் நிலையம் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, மேற்கு மண்டல டி. ஐ. ஜி. முத்துசாமி, இன்று மதியம், அந்தியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை கையாளும் முறை குறித்தும், காவலர்கள் பொதுமக்களிடம் அணுக வேண்டிய முறை குறித்தும், வரவேற்பு பதிவேடு பராமரித்தல் பற்றியும், பொது மக்களுக்கு குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு இருக்கை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துதல் பற்றியும், போக்சோ வழக்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதுகுறித்துப் பேசிய டிஐஜி முத்துசாமி, தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களை கண்டறிந்து விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், மேற்கு மண்டலத்தில் மூன்று காவல் நிலையங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படும் எனவும், பரிந்துரை செய்யப்பட்ட காவல் நிலையங்களில் ஆய்வு செய்து தகுதி உள்ள காவல் நிலையங்களுக்கு விருது வழங்கப்படும் எனவும் கூறினார். ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன், பவானி டிஎஸ்பி கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், உதவி ஆய்வாளர் கார்த்தி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.