சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரம் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.;
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியான பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் குண்டம் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடக, கேரளா, சிக்கிம் உள்பட பல்வேறு மாநில பக்தர்கள் உள்பட லட்சக்கணக்கான கலந்து கொண்டு குண்டம் இறங்கி, அம்மனை தரிசனம் செய்து விட்டு, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி சென்றனர்.
இந்த நிலையில், குண்டம் திருவிழாவை தொடர்ந்து துணை ஆணையர் மேனகா தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், உதவி ஆணையர் சுகுமார், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர், சங்கர கோமதி மற்றும் அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி, தங்கவேல், அமுதா, பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து என்னும் பணி நடைபெற்றது.
இதில், மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 76 பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும், தங்கம் 217 கிராம், வெள்ளி 839 கிராம் நகைகளை பக்தர்கள் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தினர். இந்த உண்டியல்கள் திறந்து பணம் என்னும் பணிகளில் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.