அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கால்நடைகளுடன் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்க பர்கூர் வட்டாரத் தலைவர் எஸ் வி மாரிமுத்து தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் ஆர் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், வனப் பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும், இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்து மலைவாழ் மக்களின் வாழ்வாதரத்திற்கு வழி வகுக்க வேண்டும் எனவும், கால்நடைகளுடன் கண்டன முழக்கம் எழுப்பினர்.
இதில், மலைவாழ் மக்கள் சங்க பர்கூர் வட்டார செயலாளர் தங்கராசு பொருளாளர் முருகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.