கோபி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்!
சேலம் மாவட்ட போலீசாரை கண்டித்து, கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட போலீசாரை கண்டித்து, கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு கைதிகளை விசாரணைக்காக அழைத்து செல்ல சேலம் மாவட்ட போலீசார் 4 பேர் கோபி வந்துள்ளனர்.
பின்னர், கோபி கச்சேரிமேட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகளை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற பாயிண்ட் டூ பாயிண்ட் அரசு பேருந்தில் போலீசார் ஏறி உள்ளனர்.
அப்போது, பேருந்தில் நடத்துநராக இருந்த கவுந்தப்பாடியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், பேருந்து பாயிண்ட் டூ பாயிண்ட் என்பதால், 2 விசாரணை கைதிகளுக்கு மட்டும் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கூறி உள்ளார்.
மேலும், இடையில் நிறுத்தம் இல்லாததால் சத்தியமங்கலத்தில் இருந்து கோபிக்கு வழங்கப்படும் முழு பயண சீட்டு மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேலம் மாவட்ட போலீசார் பேருந்து நடத்துநர் சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்து உள்ளனர்.
இதை தட்டி கேட்ட ஓட்டுநர் அசோக்கிடமும் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குள் பேருந்து கோபி பேருந்து நிலையம் வரவே, மற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போலீசார் தகராறில் ஈடுபட்டது தெரிய வரவே ஆத்திரமடைந்த 15க்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் பேருந்து நிலையம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். கோபி பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தினால் சுமார் 15 நிமிடம் பயணிகள் அவதிப்பட்டனர்.