ஈரோட்டில் மினி பஸ் மோதி போட்டோகிராபர் உயிரிழப்பு

ஈரோட்டில், மினி பஸ் மோதி போட்டோகிராபர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2021-11-30 20:00 GMT

ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதிவாணன். இவருடைய மகன் கரண்குமார் (வயது 23). இவர்,  ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை,  ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதி வழியாக சவிதா சிக்னல் நோக்கி கரண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

சவிதா சிக்னலுக்கு அருகில் பாரதி வீதியில் சென்றபோது,  பின்னால் வந்து கொண்டு இருந்த மினி பஸ்,  எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த கரண்குமார் மீது,  மினி பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கரண்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும்,  ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் இறந்த கரண்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News