ஈரோடு: கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்கை தொடங்கி மோசடி; 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலங்கலத்தில் கமிஷன் தருவதாக கூறி வங்கி கணக்கை தொடங்கி 20 பேரிடம் மோசடி செய்த 3 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-12-01 12:45 GMT

கைது செய்யப்பட்ட மூவரையும் படத்தில் காணலாம்.

சத்தியமங்கலங்கலத்தில் கமிஷன் தருவதாக கூறி வங்கி கணக்கை தொடங்கி 20 பேரிடம் மோசடி செய்த 3 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுப்பீர்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 36). இவரிடம், அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 29), விஜயன் (வயது 30) ஆகியோர் அணுகி தங்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அனைத்து ஆவணங்களையும் தாங்களே வைத்துக் கொள்வதாகவும், அதற்காக ரூ.2,500 கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ராமகிருஷ்ணன் வங்கி கணக்கு தொடங்குவதற்கு தேவையான ஆவணங்களை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி, வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை அவர்களே வைத்துக் கொண்டனர்.

ஒரு சில நாட்கள் கழித்து அவர்களின் நடவடிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் குறித்து ராமகிருஷ்ணன் விசாரித்தபோது பலரிடம் இதேபோல் வங்கி கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர் இதுபற்றி ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சத்தியமூர்த்தி மற்றும் விஜயன் ஆகியோரை பிடித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விஜயன், சத்தியமூர்த்தி ஆகியோர் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி அவர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர். பின்னர் அந்த வங்கி கணக்குகளை சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 29) என்பவரிடம் கொடுத்துள்ளனர்.

அவர் வங்கி கணக்கு விவரங்களை தனது செல்போனில் பதிவேற்றம் செய்து அந்த விவரங்களை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம் என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த வங்கி கணக்குகளை பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரசுதன், சத்தியமூர்த்தி, விஜயன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 500 மற்றும் 20க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் ஒரு குற்ற வழக்கில் கடந்த வாரம் திருவாரூர் போலீசாரால் கவுதம் கைது செய்யப்பட்டார். கவுதமை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மோசடி குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்த சைபர் க்ரைம் போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Similar News