அந்தியூரில் நடைபெற்ற கொரோனா ஊரடங்கு விழிப்புணர்வு கூட்டம்
புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், அந்தியூர் காவல் நிலையத்தில் வணிக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள மளிகைகடை, ஓட்டல், வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்தியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கார்த்தி தலைமையில் இன்று இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசின் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளியை நுகர்வோர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தல் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கவும், மீறினால் கடைகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.