ஈரோடு ஆட்சியா் தலைமையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (மார்ச் 8ம் தேதி) நடைபெற்றது.;

Update: 2025-03-09 01:10 GMT

பண்ணாரி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (மார்ச் 8ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் பெருந்திருவிழா வரும் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, குண்டம் திருவிழாவில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று மாலை கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அறிவுரைகள் வழங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது, பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவினையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் .

மேலும், கோவில் வளாகத்தில் தூய்மை பணியாளர்களை நியமித்து தூய்மை பணிகள் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், சத்தி - மைசூர் சாலை மற்றும் பவானிசாகர் பண்ணாரி சாலைகளில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்துக்கு நெரிசலின்றி செல்வதை கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பு சுவர்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் குண்டம் இறங்கும்போது அதாவது 8ம் தேதி அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை குண்டத்துக்கு அருகில் மருத்துவக்குழு ஒன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்பு துறையின் மூலம் தீத்தடுப்பு வாகனம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துத்துறையின் மூலம் அதிக அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும், மின்சாரத்துறையின் மூலம் தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க வேண்டும். அனைத்து துறையினரும் முன்னேற்பாடு பணிகளை தொய்வின்றி திருவிழாக்காலத்திற்கு முன்னரே செய்து முடித்து, திருவிழா நல்ல முறையில் நடைபெற ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், வன அலுவலர் (சத்தியமங்கலம் வட்டம்) குலால் யோகேஷ் விலாஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) அரிட்டா ராஜ்புட், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) முருகேசன், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் இரா.மேனகா, சத்தியமங்கலம் வட்டாட்சியர் ஜமுனாராணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News