பவானியில் இரவு முழுவதும் தொடர் மின்தடை
பவானி சொக்காரம்மன் நகர் பகுதியில் கடந்த 15 நாட்களில் 3 முறை இரவு முழுவதும் மின்வெட்டு என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பவானி மின்வாரிய அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சொக்காரம்மன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டாக தொடர்கிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 3 முறை இரவு முழுவதும் பல மணி நேரங்கள் மின்சாரம் இல்லாமல் குழந்தைகளும், முதியவர்களும் புழுக்கத்தாலும் கொசுக்கடியாலும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, அவசர உதவி மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரவு நேரங்களில் மக்கள் தொடர்பு கொண்டால், லைன்மேன் முதல் இளநிலை பொறியாளர், செயற்பொறியாளர் வரையில் யாருமே, மொபைல்போன் அழைப்பை ஏற்பதில்லை.எனவே மின் வெட்டுக்கான உரிய காரணத்தை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.