ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்று 1,220 பேர் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 1,220 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்றைய பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.
அதேபோல் தொற்று பரவல் சதவீதமும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அதாவது நேற்று 4 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில், 1066 பேருக்கு உறுதியானது. இதனால் தொற்று பரவல் சதவீதம் 23.1 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் ஒரு சதவீதத்தினர் மட்டுமே தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள். இது தற்போது 25.5 சதவீதத்தை கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 1,220 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 418 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 406 பேர் குணமடைந்தார்கள்.இன்று மட்டும் 554 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள்.
தினமும் ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. தற்போது 6 ஆயிரத்து 291 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். இருந்தாலும், தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை கொரோனாவுக்கு 721 பேர் பலியாகி உள்ளனர்.