புலிகள் காப்பகம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
புலிகள் காப்பகம் அறிவிப்பு குறித்து அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தாமரைக்கரையில் பல்வேறு கட்சியினர் ஆலோசனை;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப் பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதிகளை, ஈரோடு புலிகள் காப்பகம் என்ற புதிய புலிகள் காப்பகமாக அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய புலிகள் காப்பகம் அமைவதால், மலை வாழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆலோசிப்பதற்கான அனைத்துக்கட்சிகளின் கூட்டம் தாமரைக்கரையில் நடைபெற்றது. இதில், பர்கூர் ஊராட்சியில் உள்ள திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதுதவிர, துருசனாம்பாளையம், பெஜ்ஜில்பாளையம், தாளகரை, தாமரைக்கரை, சோளகனை, ஈரெட்டி, பெஜலட்டி,ஒசூர் , ஆலனை , ஒந்தனை, கொங்காடை, பர்கூர், தேவர்மலை, தின்னக்காடு , தம்புரெட்டி உள்ளிட்ட 34 மலைக் கிராமங்களின் ஊர்த் தலைவர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெங்கடாசலம் தலைமையில் நடந்த கூட்டத்தில், வரும் 10 தேதி தாமரைக்கரையில் அனைத்து கட்சிகள் மற்றும் மலைவாழ் கிராமங்களை சார்ந்த மக்கள் திரண்டு, வன உரிசை சட்டம் சம்பந்தமான பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ட திரள்வது என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் வி.பி.குணசேகரன் கூறுகையில்; ஏற்கெனவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில், புலிகள் நடமாடும் பகுதி என குறிப்பிடப்பட்டு, அங்குள்ள பழங்குடி மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. காலம் காலமாக காடுகளை நம்பி வாழும் பழங்குடிகள் பாரம்பரிய உரிமைகளை இழந்து வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வன உரிமைச் சட்டத்தை மலைப்பகுதி முழுவதும் முறையாக அமல்படுத்திய பின்பே புலிகள் காப்பகமாக அறிவிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்