மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு சலுகை: சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு
பவானி சங்கமேஸ்வரர் கோயில் மண்டபங்களில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.;
சங்கமேஸ்வரர் கோயிலில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு சலுகை அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இதில், கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதேபோல் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான மண்டபத்திற்கு தனியாக வாடகை செலுத்த வேண்டும். இந்நிலையில், மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கட்டணம் மற்றும் வாடகை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பவானி சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதும் இன்றியும், கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகை ஏதும் இன்றியும், திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் திருணத்தின் போது மண மக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், புத்தாடைகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.