ஈரோடு மாநகராட்சியில் கொரோனா சிகிச்சை மையம் - கலெக்டர் நேரில் ஆய்வு

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-01-20 00:30 GMT

திண்டலில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள்,  மாவட்ட நிர்வாகம் சார்பில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் போதிய படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் 4 எண்ணிக்கையில் ஆக்சிஜன் படுக்கை உட்பட சுமார் 100 எண்ணிக்கையிலான படுக்கை வசதிகளுடன், அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை,  நேற்று  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சிகிச்சை மையத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது,  மாநகர்நல அலுவலர் சுஜாதா, ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் உட்பட பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News