மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி விற்பனை மையத்தினை துவக்கி வைத்த கலெக்டர்
மாவட்ட வழங்கல் விற்பனை சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையத்தினை கலெக்டர் திறந்து வைத்தார்.;
ஈரோடு மாவட்டம், பன்னீர்செல்வம் பூங்கா அருகில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை மையத்தினை (ஆற்றல் ஈரோடு) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு மகளிர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்.
இம்மையத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சார்பில் தயார் செய்யப்பட்ட, கைவினை பொருட்கள் புடவைகள், மட்பாண்ட பொருட்கள், பவானி ஜமுக்காளம், காட்டன், சணல் பைகள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்கு மட்டை பொருட்கள், சிறுதானியங்கள், குண்டு வெல்லம், தேன், திண்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், நாட்டு சர்க்கரை மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்விற்பனை மையத்தினை தொடங்கி வைத்து, பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் இம்மையத்தினை பயன்படுத்தி, மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த வேண்டுமென தெரிவித்தார். முன்னதாக, மகளிர் சுய உதவிக்குழுவினரால் செயல்படுத்தப்படும், ஆவின் விற்பனை நிலையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் , உதவி ஆட்சியர் (பயிற்சி) எகம்.ஜெ.சிங் , திட்ட இயக்குநர்/ மகளிர் திட்டம் கெட்சிலீமா அமலினி, உதவி திட்ட அலுவலர்கள் சாந்தா, பாஸ்கர், உமாசுந் .சம்பத் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.