காசநோய் இல்லா ஈரோடு மாவட்டமாக உருவாக்க 100 நாட்களுக்கு தீவிர காசநோய் முகாம்கள்
ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று (டிச.7) முதல் 100 நாட்களுக்கு தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று (டிச.7) முதல் 100 நாட்களுக்கு தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வாகனத்தினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, வருகின்ற 2025 வருடத்திற்குள் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது புதிய காசநோய் தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிப்பை தீவிரப்படுத்தி முனைப்பை ஏற்படுத்துவது, காசநோயினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் புதிய காசநோயாளிகள் உருவாகுவதை தடுப்பது ஆகும்.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டுபிடிப்பு முகாம்கள் இன்று (டிச.7) முதல் அடுத்த ஆண்டு 2025 மார்ச் மாதம் 22ம் தேதி வரை தொடர்ந்து 100 நாட்களுக்கு நடத்தப்பட்டு காசநோய்க்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.
மேலும், இம்முகாம்களில் நவீன பரிசோதனை கருவிகளைக் கொண்டு சளி பரிசோதனை மற்றும் ஊடுகதிர் பரிசோதனை போன்ற காசநோய்க்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
காசநோய் ஒரு உயிர் கொல்லி நோய். இது காற்றின் மூலம் பரவும் சமுதாய வியாதியாகும். காசநோய்க்கான அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேற்ப்பட்ட சளியுடன் கூடிய இருமல், மாலை நேரக்காய்ச்சல், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைவு, சளியுடன் கூடிய இரத்தம், நெஞ்சு வலி போன்றவைகள் ஆகும்.
காசநோயாளிகளுடன் வசிப்பவர்கள் மற்றும் சமூகத் தொடர்பில் இருப்பவர்கள், கட்டுப்படாத சர்க்கரை நோய் உள்ளவர்கள், பல்வேறு உடல் பிரச்சனைகளால் உடல் மெலிந்து பலவீனமானவர்கள் காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்க்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆகவே, ஈரோடு மாவட்ட பொது மக்கள் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவராக இருப்பின் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் நடைபெறும் காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்க சிறப்பு தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம்களை அணுகலாம் .
மேலும், தங்கள் வீடு தேடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி இலவச காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்க்கொண்டு தங்கள் இன்னுயிரை பாதுகாத்துக் கொண்டு, காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், காசநோய் இல்லா ஈரோடு உருவாக உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (காசநோய்) மரு.ராமசந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணாதேவி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.ரவீந்திரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.கவிதா உயர் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.