அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆட்சியர் ஆய்வு

அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தம்பூண்டி, மூங்கில்பட்டி, வேம்பத்தி, சின்னதம்பிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-03-24 12:30 GMT

மூங்கில்பட்டியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர். 

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, இன்று நேரில் சென்று பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கூத்தம்பூண்டி ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.21 இலட்சம் மதிப்பீட்டில், தனிநபர் உறுஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

மண் புழு உரம் தயாரிப்பு

அதேபோல், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12,000/- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனிநபர் இல்லக் கழிப்பறையினையும், மேலும், கூத்தம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.14.24 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல் பணியினையும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அதேப்பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.62 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த மண்புழு உரம் தயாரிக்கும் பணியினையும், வேம்பத்தி ஊராட்சி நாச்சிமுத்துபுரம் சக்தி மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர், மூங்கில்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.52,000/- மதிப்பீட்டில் நூலகம் புதுப்பிக்கப்பட்டதை பார்வையிட்டு, நூலகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கூத்தம்பூண்டி ஊராட்சி சின்னத்தம்பிபாளையத்தில் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செயல்படும் நியாய விலைக்கடையினையும் பார்வையிட்டார்.

மரக்கன்று நட்ட ஆட்சியர்

சின்னதம்பிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியினையும் அப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தினையும், அத்தாணி மற்றும் சின்னதம்பிபாளையம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களையும், தங்கபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42,000/- மதிப்பீட்டில் மரக்கன்று நடும் பணியினை பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மேலும், குப்பாண்டம்பாளையம் கிராமம் தம்மங்கரடு பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.2,32,420/- மானிய உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர் கருவிகள், மின்சார மோட்டார், நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றினையும் ஆய்வு மேற்கொண்டார். 

முன்னதாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தேசிய கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்,  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என ஊராட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

அந்தியூரில் ஆய்வு 

தொடர்ந்து, அந்தியூர் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, ஆக்ஸிஜன் செறிவூட்டும் கலன்களையும் மற்றும் "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 7 நோயாளிகளுக்கும் அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அந்தியூர் வட்டாட்சியர், வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News