ஈரோட்டில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி துவக்கி வைப்பு

ஈரோட்டில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

Update: 2023-08-17 12:29 GMT

பெண்குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பேசினார்.

ஈரோடு மாநகராட்சி, கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை & பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டம் குறித்து பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வியாழக்கிழமை (இன்று) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். நமது மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், விலையில்லா மிதிவண்டி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் பெண்களின் உயர் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை & பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டம் குறித்து பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டும், கற்றலினால் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றம், கவனம் சிதறாமல் கல்வியில் ஆர்வம் காட்டுதல், குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான வயது, மன முதிர்வு நிலை, தொலைபேசியில் பகிர கூடாதவை, தொலைபேசியில் வரும் மிரட்டல்களை கையாளும் விதம், மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கான வழிவகைகளையும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மற்றும் மலை பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை கற்றலில் பின்தங்கிய பெண் குழந்தைகள், கவனக்குறைபாடு உள்ள குடும்ப சூழ்நிலை சரியில்லாத பெண் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளை அடையாளம் கண்டு பெண் கல்வியை ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். எனவே இந்த திட்டத்தினை பெண் குழந்தைகளான நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து, கல்வியியல் உளவியலாளர் சரண்யா ஜெயகுமார் "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் தொடர்பாக மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொற்பொழிவு ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 234 பெண் குழந்தைகளும், பன்னாரியம்மன் பப்ளிக் பள்ளி சத்தியமங்கலத்தில் (தாளவாடி அந்தியூர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம்) 200 பெண் குழந்தைகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, நேர்முக உதவியாளர் (மேல்நிலைக்கல்வி) திம்மராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News