பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: கோவை சரக டிஐஜி ஆய்வு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கோவை சரக டிஐஜி சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-03-30 01:50 GMT

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கோவை சரக டிஐஜி சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத குண்டம் திருவிழா ஏப்ரல் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை சரக டிஐஜி சசிமோகன் நேற்று (மார்ச் 29) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவில் வளாகத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகள், திருவிழாவில் புதிதாக பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


தொடர்ந்து, திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்டு வரும் பந்தல் மற்றும் வரிசை தடுப்பினை பார்வையிட்டு திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

மேலும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு, கோவில் துணை ஆணையர் மேகனா ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News