அந்தியூர் பேரூராட்சியில் தூய்மை விழிப்புணர்வு பேரணி
அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் இன்று துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நகரத் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நீர் நிலைகளை பாதுகாத்தல் மரக்கன்றுகள் நடுதல் பொது சுகாதாரம் நகரத் தூய்மை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கிய பேரணியை, பேரூராட்சி உதவி இயக்குனர் கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் துவக்கி வைத்தார். அண்ணா சாலை சிங்காரவேதி தேர் வீதி வழியாக சென்ற பேரணி அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது.
இதில் கலந்துகொண்ட அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி படை மாணவர்கள், நகரத் தூய்மை நீர் நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். முன்னதாக அந்தியூர் அண்ணாசாலையில் உள்ள சாக்கடை வடிகால் மற்றும் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் சாலையை சுத்தப்படுத்தும் பணியில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டனர்.
மேலும், அந்தியூர் காமராஜர் வீதியில் தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து நகரம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அல்ட்ரா தன்னார்வ தொண்டு நிறுவனர் தண்டாயுதபாணி, பேரூராட்சி பணியாளர்கள் குணசேகரன் ஈஸ்வரமூர்த்தி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.