முதல்வர் ஸ்டாலின் நாளை ஈரோடு வருகை: விழா மேடை பணி குறித்து அமைச்சர் பார்வை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஈரோட்டிற்கு நாளை (டிச.19) மதியம் வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஈரோட்டிற்கு நாளை (டிச.19) மதியம் வருகிறார்.
மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 2 நாட்கள் நிகழ்ச்சியாக ஈரோடு மாவட்டத்திற்கு நாளை (19ம் தேதி) மதியம் வருகை தர உள்ளார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
அங்கிருந்து 11 மணிக்கு சாலை மார்க்கமாக ஈரோட்டிற்கு மதியம் சுமார் 1 மணியளவில் வருகை தருகிறார். பின்னர் ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடக்கும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு ஈரோடு- பெருந்துறை சாலையில் முத்து மஹாலில் நடக்கும் முன்னாள் எம்எல்ஏ சந்திரக்குமார் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்துகிறார். இரவு 7 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவு செய்து, காலிங்கராயன் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
இதையடுத்து 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். விழாவில் மாவட்டத்தில் ரூ.1,377 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கியும் வைத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்.
இதனையொட்டி, அரசு விழா நடக்கும் சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல் மேடையினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று(டிச.18) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் , முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 மாவட்டத்தைச் 2,480 போலீசார் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபட உள்ளனர்.