பங்களாப்புதூர்: லாட்டரி சீட்டு என ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய நபர் கைது
பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் வெளி மாநில லாட்டரி சீட்டு என ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30), இவரிடம் வாணிப்புத்தூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த குமார் (45) என்பவர் பரிசு விழும் என ஆசை வார்த்தை கூறி ரூ.100 வாங்கி கொண்டு வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இரண்டு கொடுத்துள்ளார். விசாரித்ததில் இரண்டு லாட்டரி சீட்டுக்களும் போலி என தெரியவந்தது, இதனையடுத்து நேற்று தன்னை ஏமாற்றிய குமார் மீது பங்களாப்புதூர் போலீசாரிடம் கார்த்திக் புகார் செய்துள்ளார்.
புகாரின்பேரில் குமாரை தேடிவந்த போலீசார், கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள பெட்டி கடை அருகே இருசக்கர வாகனத்தில் போலி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.குமாரிடம் இருந்து ரூ.2,800 மதிப்புள்ள 56 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், செல்போன், லாட்டரி விற்ற பணம் ரூ.300 மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பிடிபட்ட குமாரிடம் போலீசார் விசாரணை செய்ததில்; கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயா லாட்டரி ஏஜென்சி-ஐ சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை குமார் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.