ஈரோடு வணிக வளாகத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு
ஈரோடு செல்போன் கடையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்களை திருடிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் கடையை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன் ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்களை சாக்கு மூட்டையில் கட்டி சென்ற துணிகர சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த பூபதி கோவையை சேர்ந்த தரணிதரன் ஆகிய இருவரும் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது கடையில் ஈரோட்டை சேர்ந்த கவுதம் மற்றும் கார்த்தி ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு வியாபாரம் முடிந்து வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுவிட்ட னர். இந்நிலையில் இன்று காலை கடையின் ஷட்டர் திறக்கப்பட்டு முன்புறம் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட வணிக வளாக உரிமையாளர் செல்போன் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதே சமயத்தில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, இன்று அதிகாலை 5 மணிக்கு கொள்ளையன் ஒருவன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான். மேலும் இரும்பு கம்பியால் முன்புறம் உள்ள கண்ணாடியை உடைத்து கடையில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 50 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் என மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்பிலான போன்களை ஒரு சாக்கில் மூட்டையாக கட்டிக்கொண்டு வெளியே சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. கண்ணாடியை உடைத்த போது கொள்ளையனின் காலில் கண்ணாடி கிழித்து காயம் ஏற்பட்டதால், ரத்தக்கரை கடைக்குள் ஆங்காங்கே படிந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையனை தேடி வருகின்றனர். மேலும், இது குறித்து டவுன் டி.எஸ்.பி ஆனந்தகிருஷ்ணன் நிகழ்விடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். யாசகம் செய்பவர் போன்ற தோற்றமுடைய நபர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால், மாநகர் பகுதி முழுவதும் போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பழைய குற்றவாளிகளின் பட்டியலில் உள்ள முக அமைப்பு, கைரேகைகளை ஒப்பிட்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஈரோடு மேட்டூர் ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக நிறுவன பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.