ஈரோடு: சத்தியமங்கலம் அருகே குன்றி மலைப்பகுதியில் செல்போன் டவர் சேவை
சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி மலைப்பகுதியில் செல்போன் டவர் திறக்கப்பட்டதால், மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே குன்றி மலைப்பகுதியில் 15 கிராமங்களில் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் செல்போன் டவர் வசதி இல்லாததால், அவசர மற்றும் ஆபத்து காலங்களில், பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
கடந்த, 10 ஆண்டுகளாக இந்நிலை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், தனியார் நிறுவனம் சார்பில், செல்போன் டவர் கட்ட பணி தொடங்கி கடந்த வாரம் சோதனை ஓட்டம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று செல்போன் டவரை, மக்கள் பயன்பாட்டுக்கு, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் மக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவியரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.