பவானி அருகே வாகனம் திருட்டு பற்றி சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை
பவானி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர் திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.;
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பழைய பெட்ரோல் பங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி மகன் சக்திவேல் (வயது 25). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் எங்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து வீட்டின் அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சக்திவேல் ஆய்வு செய்தார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் நிற்பதை நோட்டமிட்டு சைடு லாக்கை உடைத்து வண்டியை தள்ளி கொண்டு செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து சக்திவேல் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சி.சி. டி.வி. காட்சியில் பதிவான வாலிபர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.