இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு இடங்களில் நடைபெறும்: தேர்தல் அலுவலர்

77 வேட்பாளர்கள் இருப்பதால் காலதாமதத்தை தவிர்க்க இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.;

Update: 2023-02-23 12:45 GMT

பைல் படம்.

ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு இடங்களில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மையம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலைக்கு வரும். 77 வேட்பாளர்கள் இருப்பதால் காலதாமதத்தை தவிர்க்க இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். ஒரு அறையில் 10 மேஜைகளும், மற்றொரு அறையில் 6 மேஜைகளும் அமைக்கப்படும்.

ஒவ்வொரு மேஜையிலும் 3 நபர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு என்னும் மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும். வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் ஸ்ட்ராங் ரூம் மற்றும் வாக்கு எண்ணும் அறைகள் முழுமையாக வெப் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 734 புகார்கள் பெறப்பட்டு, அதில் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்தல் அலுவலர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.

Tags:    

Similar News