கோபிசெட்டிபாளையம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளைத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசூர் இண்டியம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கடை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த மதுக்கடையில் விற்பனையாளராக சத்தியமங்கலத்தை சேர்ந்த சண்முகம், அருண் ராஜ் , சரவணன், மாரிமுத்து ஆகியோரும், விண்ணப்பள்ளியை சேர்ந்த சந்திரசேகர் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், நேற்று விற்பனையான ரூ.1.87லட்சம் ரூபாய் தொகையை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துவிட்டு சண்முகம் சென்றுள்ளார்.
இதனையடுத்து, இன்று காலை மதுக்கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அப்பகுதியில் உள்ள ஒருவர் சண்முகத்திடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சண்முகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பி ஆறுமுகம், கடத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரிக்கப்பட்டன. பின்னர் கடையின் இருப்புகளை சரிபார்த்த போது, கடையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.