மொடக்குறிச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம்; அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மொடக்குறிச்சி அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் சாத்தியமாகியுள்ளது. இந்தச் சாதனை தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராசு என்பவர் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில், சனிக்கிழமை (இன்று) ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து, ராசுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் இளஞ்செழியன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடனிருந்தார்கள்.