ஈரோடு பகுதி தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்க வணிக கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2023-10-09 12:44 GMT

ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தொழிற்சாலையில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி, ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்க வணிக கூட்டமைப்பு சார்பில் தொழிற்சாலைகளில் திங்கட்கிழமை (இன்று) கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டணத்தை குறைக்கக்கோரி தொழிற் சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

இதன்பேரில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

மேலும், தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக் அவர்ஸ் கட்டணம் திரும்பப் பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணம் ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் அளித்தனர்.

கொங்கு மண்டலத்தில் மின் கட்டண உயர்வால் பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பல ஆயிரம்பேர் வேலை இழந்து உள்ளனர். மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே தொழிற்சாலைகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News