40 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும்! சொல்கிறார் மணப்பாறை எம்எல்ஏ
40 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும் என்று ஈரோட்டில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டியளித்துள்ளார்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஈரோடு சுல்தான் பேட்டை பள்ளிவாசலில் தொழுகையை முடித்த பிறகு அங்கிருந்து இஸ்லாமிய மக்களிடம் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் கே.இ பிரகாஷிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
இன்னும் நான்கு முறை மட்டுமல்ல, 40 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களையும் மோடி அறிவிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டு கால பாஜகவின் மோடி அரசு, அரசு துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்ததில் தொடங்கி பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தியதன் காரணமாக பிஜேபிக்கு எதிரான அலை இந்தியா முழுவதும் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இப்பேட்டியின் போது, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ரிஸ்வான், மமக மாவட்ட செயலாளர் சலீம், தமுமுக மாவட்ட செயலாளர் முகமது லரீப், மாவட்ட பொருளாளர் சகுபர் அலி, விடுதலை சிறுத்தை கட்சியின் ஈரோடு திருப்பூர் மண்டல பொறுப்பாளர் ஜாஃபர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.