தாய்மார்களுக்கு ஊதியம் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சொன்னதுதான்: கமல்ஹாசன்
தாய்மார்களுக்கு ஊதியம் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சொன்னதுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பிரசாரத்தில் தெரிவித்தார்.;
பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கார்த்திக் குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
எங்கள் கட்சிக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று. ஏற்கனவே நாங்கள் நற்பணிகள் செய்து கொண்டிருந்தவர்கள், மீண்டும் அனைத்து மக்களுக்கும் எங்களது சேவைகளை செய்யும் வேலையில் எங்களது கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏழைகளின் கையில் எதையாவது ஒன்றை வைத்து அழுத்தி ஏமாற்றுகிறார்கள். இதை இனிமேல் செய்யக்கூடாது.
தாய்மார்களுக்கு ஊதியம் என்பதை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் அறிவித்தது. அதை இன்று தற்போது உள்ள அனைத்து கட்சிகளும் அறிவித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டுக்கு கணினி வந்தால் அரசுடன் நேரடியாக பேசவும் உங்களுடைய தேவைகளை நேரடியாக வழங்குவதற்கு மக்கள் நீதி மையம் செய்து கொடுக்கும்.
சத்தியமங்கலத்தில் செண்டுமல்லி தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி நிலையம் இங்கு கொண்டு வரப்படும். பவானிசாகர் பாசன நீரில் கழிவு நீர் கலக்கிறது. அதிகாரத்தை கையில் கொடுத்தால் தான் இதனை சரிசெய்ய முடியும். சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ரயில் போக்குவரத்து வசதி மற்றும் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை விரிவாக்கம், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை கூர்ந்து கவனிக்கவேண்டும் இவற்றையெல்லாம் செய்ய மக்கள் நீதி மைய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.