திம்பம் மலைப்பகுதியில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் படுகாயம்

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதியில் நெல் ஏற்றி வந்த லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-11-23 13:45 GMT

திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. திம்பம் மலைப்பகுதியானது தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும்  முக்கிய வழித்தடமாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக அன்றாடம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து கும்பகோணத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு வந்த லாரியை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஜெயராம் என்பவர் லாரியை இயக்கி வந்தார். லாரி திம்பம் மலைப்பகுதியில் 2-வது கொண்டை ஊசி வளைவு திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் இருந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் டிரைவர் ஜெயராம் படுகாயம் அடைந்தார்.

லாரியில் பயணம் செய்த உதவியாளர் ஆத்தூரை சேர்ந்த பச்சையப்பன் என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இவரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் பண்ணாரி சோதனைச்சாவடி போலீசார் விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வர வழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News