பண்ணாரி சோதனை சாவடி அருகே ஒற்றை யானை அட்டகாசம்: ஊழியர்கள் அச்சம்
பண்ணாரி சோதனை சாவடி அருகே பிக்கப் வேனை யானை சேதப்படுத்த முயன்றதால் தடுக்க முயன்ற வாகன ஓட்டிகளை தூரத்தியது.
பண்ணாரி சோதனை சாவடியில் காட்டுயானை வாகன ஓட்டிகளை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இரு மாநில எல்லையான பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சம்மந்தப்பட்ட துறை ஊழியர்கள் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தது. காட்டுயானை சாலைக்கு வந்ததை கண்ட சோதனைச் சாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர். அப்போது சோதனைச்சாவடி அருகே நின்றிருந்த வாழைக்காய் பாரம் ஏற்றிய பிக்கப் சரக்கு வேன் அருகே சென்ற காட்டு யானையை வாழைக்காயை பறித்துத் தின்பதற்காக யானை தனது தும்பிக்கையால் வாகனத்தை முட்டி தள்ளியது.
அப்போது அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் சோதனைச்சாவடி பணியாளர்கள் சத்தம் போட்டதால் காட்டு யானை திடீரென ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து சோதனைச்சாவடி ஊழியர்களை துரத்தியது. இதனால் நாலாபுறமும் சிதறி ஓடிய சோதனைச் சாவடி ஊழியர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் சோதனைச் சாவடி பகுதியில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து துரத்தியதால் வனப்பகுதிக்குள் சென்றது.
இதன் காரணமாக சோதனைச்சாவடி பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் காட்டு யானை நடமாடிய சூழ்நிலையில் இன்று பகல் நேரத்திலேயே சோதனைச் சாவடி பகுதியில் யானை நடமாடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் சோதனைச் சாவடி ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.