பள்ளி மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கடம்பூர் மலைப்பாதையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-09 10:00 GMT

கடம்பூர் பகுதி அருகே உள்ள அருகியம், மாக்கம்பாளையம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்ததால் அங்குள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. இந்த தரைப் பாலம் வழியாக தான் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வியாபாரத்திற்கும், மாணவர்கள் பள்ளிக்கும் சென்று வந்தனர். இந்நிலையில்  வெள்ளம் காட்டாற்று ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் அவர்களால் ஊரை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.

குழந்தைகளும் பள்ளிக்கு செல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று இங்கு பாலம் கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை பாலம் கட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று கடம்பூர் பஸ் நிலையம் அருகே குழந்தைகள், பெற்றோர், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கடம்பூர் போலீசார், சத்தியமங்கலம் சேர்மன் இளங்கோ மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் எங்கள் பகுதியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News