பவானிசாகர் அருகே சிறுத்தை கடித்து ஆட்டுக்குட்டி இறப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு பொதுமக்கள் சாலை மறியல்.

Update: 2021-11-22 11:00 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பவானிசாகர் அருகே உள்ள பசுவாபாளையம் என்ற பகுதியில் விவசாயி ஒருவர் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டு முன்பு கட்டியிருந்த ஒரு ஆட்டுக்குட்டியை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை தாக்கியது. இதையடுத்து ஆடுகள் சத்தம் போட்டது. இதையடுத்து வீட்டுக்குள் படுத்திருந்த விவசாயி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை ஆட்டை அடித்து கொன்று ரத்தத்தை குடித்துக் கொண்டு இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.இதையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஆட்டுக்குட்டி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை கால்நடைகளை தாக்கி வேட்டையாடி வருகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

இது பற்றி தெரிய வந்ததும் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயக்கோபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News