பவானிசாகர் அருகே மர்ம பொருள் வெடித்து வீடு சேதம்: போலீசார் விசாரணை
பவானிசாகர் அருகே மர்ம பொருள் வெடித்து வீடு சேதம். ஜன்னல், கதவுகள் தூக்கி வீசப்பட்டது. தடவியல் நிபுணர்கள் ஆய்வு.;
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புங்கார் காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (42). விவசாயி. நேற்று இரவு 9 மணி அளவில் இவரது வீட்டில் மர்ம பொருள் வெடித்து பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல், கதவுகள் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த மின் விசிறி, டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மேலும் வீட்டின் பல்வேறு இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.சத்தம் கேட்டு அருகில்இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த அனைவரும் வெளியே பதட்டத்துடன் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அருகில் இருந்த சிலர் மர்மபொருள் வெடித்த வீட்டிற்குள் சென்று அங்கிருந்த கியாஸ் சிலிண்டரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். அப்போது பழனிச்சாமி யிடம் வீட்டில் ஏதாவது வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தீர்களா? என்று வி சாரித்தன ஆனால் அவர் ஏதும் இல்லை என்று மறுத்து விட்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: பழனிச்சாமி காட்டுபன்றிகளை விரட்ட ஏதாவது வெடிகுண்டுகள் பதுக்கி வைத்து இருந்தாரா? அல்லது பாறையை உடைக்கும் வெடிபொருட்கள் ஏதாவது வைத்து இருந்த போது தவறி வெடித்து இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் பழனிச்சாமியின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் நடந்த விபத்துக்கான முழு விபரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் காரணமாக அந்தபகுதியில் விடிய, விடிய பரப்பான சூழ்நிலை நிலவியது.